IndiaLatest

தேசிய மருத்துவர்கள் தினத்தில் முன்மாதிரியாகத் திகழும் சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

“Manju”
புகைப்படம்: தேசிய மருத்துவர்கள் தின விழாவின் ஒரு பகுதியாக சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள படுக்கை நோயாளிகளை பார்வையிட்டனர்.

போத்தன்கோடு: தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொண்டுகள் செய்து சேவை புரிந்தனர்.

 

மாணிக்கால் கிராம பஞ்சாயத்து சாந்திகிரி வார்டில் படுத்த படுக்கையாகக் கிடக்கும் நோயாளிகளுக்குப் பயன்படும் விதத்தில் உதவிக்கரம் நீட்டி சித்த மருத்துவ மாணவர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். சாந்திகிரி எல்.ஐ.ஜி குடியிருப்பில் பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்த அறுபத்தைந்து வயதுள்ளவரான திரு.சுகதன் .கே மற்றும் ஆனந்தபுரத்தில் பார்கின்சன் நோயால் ஊனமுற்ற அறுபத்து மூன்று வயதுள்ளவரான திரு.அப்துல் கபீர் ஆகியோருக்கு சக்கர நாற்காலிகளும் மேலும் பக்கவாதத்தால் முடங்கிப்போயிருந்த அறுபத்தியிரண்டு வயதுள்ளவரான திரு.கிருஷ்ணா என்பவருக்கு வாக்கரும் வழங்கப்பட்டது. மேலும் வார்டில் உள்ள நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப வாக்கிங் ஸ்டிக்ஸ் மற்றும் டயாப்பர்களும் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு கல்லூரி மாணவர் சங்கத் தேர்தல் நடத்த தேர்தல் பிரச்சாரத்திற்குத் தேவைப்படும் சுவரொட்டி, பேனர் போன்றவற்றுக்கான செலவுத் தொகையை சிக்கனமாக ஒதுக்கி வைத்து அத்தொகையை இயலாத மக்களுக்கு உதவியாக வழங்கிய இச்செயலானது வரலாற்றில் கவனிக்கத்தக்க ஒன்றாக விளங்குகிறது.

கல்லூரி முதல்வர் டாக்டர் டி.கே.சௌந்தரராஜன் இவ்விநியோகத்தைத் துவக்கி வைத்தார். மாணிக்கால் கிராம பஞ்சாயத்து நல நிலைக்குழு தலைவர் ஆர்.சஹீரத் பீவி, மருத்துவப் பணியாளர் மல்லிகா.எஸ், அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை ஷீஜா.என், ஆகியோர் புதிய மாணவர் சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் 19வது பி.எஸ்.எம்.எஸ் மாணவர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று சக்கர நாற்காலி, வாக்கர் போன்றவற்றை வழங்கினர்.

மேலும் இச்சேவையின் தொடர்ச்சியாக பஞ்சாயத்துடன் இணைந்து வீடு வீடாகச் சென்று மீண்டும் பல சேவைகளை வழங்குவதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என மருத்துவ ஒருங்கிணைப்பாளர் டாக்டர். பிரகாஷ் எஸ்.எல். அறிவித்தார்.

Related Articles

Back to top button