IndiaLatest

சாந்திகிரி ஆசிரம வெள்ளி விழா கொண்டாட்டங்கள் ஜனவரி 5ம் தேதி துவக்கம்

“Manju”

சென்னை: சாந்திகிரி ஆசிரமம் இருபத்தைந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதன் நிறைவாக, ஜனவரி 5, 2024 வெள்ளிக்கிழமை அன்று விமரிசையான கொண்டாட்டங்கள் தொடங்கும்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் உள்ள சாந்திகிரி ஆசிரமத்தில் கட்டபட்டுள்ள தரிசனமந்திரம் சாந்திகிரி ஆசிரம ஆன்மீக தலைமை குருஸ்தானிய சிஷ்யபூஜித அமிர்தா ஞான தபஸ்வினி அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது. மேலும் வெள்ளி விழா வளாகத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறும். சாந்திகிரி ஆசிரமத்தின் மொழியும் வழியும் சிஷ்யபூஜித அவர்கள் தான். ஆன்மீக தலைமை சென்னைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி, பொதுச் செயலாளர் சுவாமி குருரத்னம் ஞான தபஸ்வி மற்றும் சுமார் 100 சன்னியாசிகள், பிரம்மச்சாரிகள் மற்றும் பக்தர்கள் என இப்புனித யாத்திரையில் சிஷ்ய பூஜிதாவுடன் வருகை தருகிறார்கள்.

சென்னை-பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் இயற்கை எழில் கொஞ்சும் செய்யூரில் இந்த ஆசிரமம் அமைந்துள்ளது. ஜனவரி 6, 2024, சனிக்கிழமை, அன்று, மதியம் 12 மணி அளவில் ஆசிரமத்திற்கு வருகை தரும் சிஷ்ய பூஜிதாவை, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பார்கள். இதைத் தொடர்ந்து குரு பூஜை, ஆராதனை, குரு தரிசனம் நடைபெறும். மாலை 4 மணிக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்கள் விழா அறிவிப்பு கூட்டத்தை துவக்கி வைக்கிறார்கள். திருநாவுக்கரசர் எம்.பி., எஸ்.டி. ராமச்சந்திரன் எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு அரசியல், சமூக, கலாசாரத் துறைகளைச் சார்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கின்றனர்.

7ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்மீக தலைமை சிஷ்யபூஜித தியான மண்டபத்தில் குத்துவிளக்கேற்றி வைக்கிறார்கள். பின்னர் வெள்ளி விழா வளாகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். காலை 11 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தை பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைக்கிறார். கேரள மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் ஜி.ஆர். அனில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மிசோரம் முன்னாள் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் ஜி.செல்வம், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பணியூர் பாபு, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யநாத், அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயலாளர் விஸ்வநாதன் பெருமாள், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் பி.கே.கிருஷ்ணதாஸ், தொழில் அதிபர் கோகுலம் கோபாலன், மெடிமிக்ஸ் உரிமையாளர் அனூப் உட்பட தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பிரமுகர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

வெள்ளி விழாவையொட்டி, திருவனந்தபுரம் சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சித்தா ஆகியவற்றின் சார்பில், இலவச மருத்துவ முகாம் மற்றும் மருந்துகள் விநியோகம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. மாலையில் திருவிளக்கு ஊர்வலம், சத்சங்கம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சாந்திகிரி ஆசிரமம் 1997 இல் சென்னையில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. ஆரம்பகால பிரார்த்தனைக் கூட்டங்கள் குரு பக்தரான கே.எஸ்.பணிக்கரின் வீட்டில் தொடங்கப்பட்டன. 2005 ஆம் ஆண்டில் பக்தர்கள் மற்றும் நலம் விரும்பிகள் செய்யூரில் சுமார் பத்து ஏக்கர் நிலத்தை ஆசிரமத்திற்கு அர்ப்பணித்தனர். முதலில் இயற்கை விவசாயம் தொடங்கப்பட்டது. ஒரு தற்காலிக பிரார்த்தனை மையம் 2015 இல் திறக்கப்பட்டது. பின்னர் இலவச உணவு வழங்குவதற்காக சமுதாய சமையல் கூடம், தங்குமிடம் மற்றும் மாட்டுத் தொழுவம் அமைக்கப்பட்டது.

முதற்கட்டமாக, புதிய பிரார்த்தனை மண்டபம், தியான மண்டபம், சித்த, ஆயுர்வேத,யோகா ஆரோக்கிய மையம் மற்றும் கல்வி வளாகம் முதலானவை களுக்கு அடிக்கல் நாட்டப்படும்.

சாந்திகிரி ஆசிரமம் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் பல தொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செய்யூர் கிளை ஆசிரமம் தமிழ்நாட்டில் உள்ள சாந்திகிரி ஆசிரமத்தின் நான்காவது கிளை ஆசிரமம் ஆகும்.
நவஜோதி ஸ்ரீகருணாகரகுருவின் கொள்கைகளின் அடிப்படையில், ஒவ்வொரு பகுதி மக்களின் நலன் மற்றும் செழிப்புக்காக ஆசிரமக் கிளைகள் செயல்படுவதாகவும், செய்யூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொண்டு மற்றும் சமூகப் பணிகள் இந்த ஆசிரமத்திலிருந்து தொடங்கும் என்றும் தினசரி 3வேளையும் அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் சுவாமி மனுசித் ஞான தபஸ்வி, சுவாமி பக்ததத்தன் ஞான தபஸ்வி, டாக்டர் ஜி.ஆர்.கிரண், கே.எஸ். பணிக்கர், விஜயன்.எஸ் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

 

Related Articles

Back to top button